Sunday, November 7, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 1

உலகில் வாழும் அரபி அல்லாத முஸ்லிம்கள் அரபுச்சொற்களை மிக அதிகளவில் உபயோகிக்கின்றனர்.அவற்றுக்கான தமிழ் விளக்கம்.

1.அன்ஸாரிகள் - அன்ஸார் என்பதற்கு உதவியாளர்கள் என்று பொருள்.யமன் நாட்டிலிருந்து மஃரிப் நீர்தேக்கத்தில் கி.பி 542 - 57 இல் உடைப்பு ஏற்பட்ட பொழுது அங்கிருந்து வந்து குடியேறிய அவ்ஸ்.கஜ்ரஜ் ஆகிய இரு பெரும் குலத்தோரே பின்பு அன்ஸாரிகளானார்கள்.மக்காவைத்துறந்து புனித மதீனாவுக்கு வந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அகமும்,புறமும்மலர வரவேற்ற ஆதரவாளர்கள் அன்ஸாரிகள்.மதீனா வாசிகள் அன்று போல் இன்றும் பண்பாட்டின் சின்னமாக விளங்குகின்றனர்.

2.அரபி - இன்று அரபி மொழி உலகில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப்பெற்றுத் திகழ்கின்றது.உலக மொழி ஆய்வினர் அரபியே உலகின் முதன் மொழி என்று கூறுகின்றனர்.உலகப்பொதுமறை திருகுர் ஆன் இறக்கப்பட்ட மொழி அரபி மொழியே ஆகும்.அரப் என்ற பதத்திற்கு உற்சாகம்,தெளிவான பேச்சு,வெளிப்படையான மொழி எனப் பல பெயர்கள் உண்டு.

3.அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்.இது தூய அல்லாஹ் ஒருவனுக்கே பொருத்தமானது.அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களில் ஒன்று.

4.அலை - அலைஹிஸ்ஸலாம் என்பதின் சுருக்கமே அலை.இதன் பொருள் அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் பெரும்பாலும் நபிமார்களின் பெயர்களை சொல்லப்பட்டவுடன் கூறப்படுவதாகும்.சில சமயம் தூதரல்லாத முன் சென்ற சில நல்லடியார்களுக்கும் சொல்லப்படும்.உதாரணம்:மர்யம்(அலை),லுக்மான்(அலை)

5.இன்ஷா அல்லாஹ் - இவ்வார்த்தைகளின் பொருள் 'அல்லாஹ் நாடினால்' என்பதாகும்.ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்தனை சிறியதாயினும் அதனை அளிக்கும் முன் 'இன்ஷா அல்லாஹ்'கூறின் அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறை வேற்ற கடமைப்பட்டுள்ளார்.

6.இஸ்லாம் - ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து,இறைவன் மனித உற்பத்தியை தொடங்கினான்.மனித குலத்தை நேர்வழிப்படுத்த இறைத்தூதர்களை மனிதர்கள் இடையே அனுப்பி வைத்தான்.எல்லாத்தூதர்களும் ஓரிறைக்கொள்கையை மட்டுமே போதித்தனர்.இந்த ஒரிறைக்கொள்கையின் மார்க்கமே இஸ்லாம்.'இஸ்லாம்'என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடி பணிதல் என்றும்,'முஸ்லிம்' என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடிபணிபவர் என்றும் பொருளாகும்.இறுதித்தூதர் எடுத்துரைத்த ஏக இறை மார்க்கத்தை கடைபிடிப்பதே இஸ்லாமாகும்.

7.இப்லீஸ் - இச்சொல்லுக்கு நிராசையுறுதல் என்று பொருள்.இறைவனின் பேரருளை விட்டும் இப்லீஸ்(ஷைத்தான்)நிராசையுற்று விட்டதால் அவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.மனிதனை வழிகெடுப்பதே இவனின் குறிகோளும்,வேலையுமாகும்.இவன் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்.இறை கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் இறைவனின் கருணையில் இருந்து நீக்கப்பட்டான்.

8.உம்ரா - நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்று பொருளாகும்.கஃபாவுக்கு செல்வது இரு வகைப்படும்.1.ஹஜ் 2.உம்ரா. உம்ராவுக்கு ஹஜ்ஜின் அத்தனை நிபந்தனைகளும் உள்ளன.ஆனால் ஹஜ்ஜை குறிப்பிட்ட காலம் வரைதான் நிறைவேற்ற இயலும்.ஆனால் உம்ராவை எக்காலத்திலும் நிறைவேற்றலாம்.புனித கஃபாவை தரிசித்து இறைவனை வழிபடும் ஒரு வழிபாடு எனவும் பொருள் கொள்ளலாம்.

9.உளூ - தொழுவதற்காக தண்ணீரால் உடலைத் தூய்மை செய்து கொள்வதற்கு 'உளு'எனக்கூறப்படுகின்றது.தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம்,வாய்,மூக்கு,தலை,காது,கால் முதலியவற்றை நபிகளாரின் வழிமுறைகளுக்குட்பட்டு,தூய்மைப்படுத்திக்கொள்ளும் அங்கசுத்தி முறையாகும்.

10.கஃபா - மக்காவில் உள்ள இறை இல்லத்திற்கு கஃபா என கூறப்படுகின்றது.இதன் முழுப்பெயர் கஃபதுல்லாஹ் எனப்படும்.இறைத்தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களாலும்,அவர்களது திருமகனார் இஸ்மாயீல் (அலை)அவர்களாளும் மக்காவில் எழுப்பப்பட்ட முதல் இறை ஆலயம்.இஸ்லாத்தில் கஃபா சிறப்பான இடத்தை வகிக்கின்றது.உலகில் உள்ள முஸ்லிம்கள் அதனை முன்னோக்கியே இறைவனைத்தொழுகின்றனர்.ஹஜ் கடமை இங்குதான் நிறை வேற்றப்படுகின்றது.இதற்கு 'மஸ்ஜிதுல் ஹராம்' புனித மிக்க பள்ளிவாசல் என்றும் பெயருண்டு.

இன்னும் வரும்.



2 comments:

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம் ..!! ஜஸாக்குமுல்லாஹ் க்கைர் :-)

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி.